சீனாவைத் தளமாகக் கொண்டு இயக்கப்படும் இணையவழித் தாக்குதல்களை தந்திரோபாய நடவடிக்கைள், மெய்நிகர் தீத்தடுப்புச் சுவர்கள் (ஃபயர்வால்ஸ்), மற்றும் மீட்டெடுக்கும் அமைப்பு ஆகியவற்றின் மூலம் நம்மால் திருப்பிவிட முடியும் என்று நமது இராணுவத் தலைவர் ஜெனரல் பிபின் ராவட் அவர்கள் சமீபத்தில் அறிவித்திருக்கிறார். எந்தத் தாக்குதல்களையும் கடுமையான நடவடிக்கைகள் மூலம் சமாளிக்க முடியும் என்றாலும், இந்தியா இன்னும் இணையப் பாதுகாப்பு விசயத்தில் பின்தங்கியே இருக்கிறது என்பதையும் அவர் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.
சீனாவின் இணையத் திறன்கள் உலகத்திற்கே தெரிந்த விசயம என்றும், இணைய யுத்தம் என்பது இந்தியாவுக்கு ஆகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் அவர் கூறியிருக்கிறார். தனது இணையப் பாதுகாப்பு அமைப்பை இந்தியா பலப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று மேலும் அவர் சொன்னார். இந்திய இராணுவப் படையின் முச்சேவைப் பிரிவான பாதுகாப்புத்துறை இணய முகமையிடம் (டிஃபென்ஸ் சைபர் ஏஜென்சி) இணைய பாதுகாப்பு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரண்டு தேசங்களுக்கும் இடையே போராட்டச் சூழல் ஏற்படும்போது, பல்வேறு நிகழ்வுகள் பின்தொடர்ந்து வருகின்றன. அவற்றில் ஒருசில நிகழ்வுகள் வெளி உலகத்திற்கு நன்றாகவே தெரிகின்றன; சில நிகழ்வுகள் மிகத் தாமதமாகவே வெளிவருகின்றன. கடந்த வருட எல்லைத் தகராறுகளுக்குப் பின்பு சீனா அமைதியாக இந்தியாவின் உட்கட்டமைப்புத் துறையின் மீது விதவிதமான தாக்குதல்களை நடத்தி இருக்கின்றன.
சமீபத்தில் அரங்கேறிய தொடர் தாக்குதல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து உளவுத்துறை அமைப்புகளுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தன. சீனா இணையத் தாக்குதல்களை மேற்கொண்டதாக சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படடு விட்டால், உலக அரங்கில் அந்தத் தேசத்தின் பேர் கெட்டுப் போகும் வாய்ப்புகள் அதிகம்.
அதனால்தான் தந்திரோபாய இணையப் போரைச் செய்வதற்கு எந்த நாடும் தயாராக இல்லை. ஆனால் கணினியை ஊடுருவி நாசம் செய்யும் ஹேக்கிங் குழுக்களை வைத்துக்கொண்டு சீனா இணையத் தாக்குதல்களில் ஈடுபடுகிறது. ரெட் எக்கோ, ஏபிடி41/பேரியம், டாண்டோ டீம், ஸ்டோன் பாண்டா, எமிசரி பாண்டா ஆகிய அந்தக் குழுக்கள் சீனாவின் ஆதரவோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
உட்கட்டமைப்பைக் குறிவைக்கும் தாக்குதல்கள்
மின்சாரமும், போக்குவரத்தும் ஒருதேசத்தின் முதுகெலும்பு. இந்தத் துறைகளில் பெரும்பங்கை வகிப்பது தொழில்நுட்பம்தான். கனபாரத்தை அனுப்பும் நிலையங்கள் (லோட் டிஸ்பாட்ச் செண்டர்ஸ்) உற்பத்தி செய்த மின்சாரத்தை பிரச்சினை இல்லாமல் வினியோகிப்பதற்கு மிகவும் முக்கியமானவை. ரெட் எக்கோ என்ற சீனாவின் அச்சுறுத்தும் குழு இந்திய மின்சார செர்வரில் ஊடுருவி ஹேக்கிங் செய்து அதன் உள்ளமைப்பில் ’ஷேடோபாட்’ என்னும் தீய மென்பொருளை கலக்கவிட்டு செர்வரை நோய்வாய்ப்படச் செய்தது. ஆனால் இந்தத் தாக்குதல் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்றும், அதீத முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன என்றும், அதனால் அதிமுக்கிய தகவல் எதுவும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளவில்லை என்றும் சம்பந்தபப்ட்ட இந்திய அமைச்சகம் தெளிவுப் படுத்தியிருக்கிறது. என்றாலும் சீனாவின் இந்தத் தாக்குதல் நமது பாதுகாப்பு அமைப்புகளைப் பற்றிச் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
அரசு நடத்தும் வங்கித்தொழில், காப்பீடு, மருத்துவம், கல்வி, போக்குவரத்து மற்றும் மின்சார நிறுவனங்கள் ஆகியவற்றில் நன்றாக மதிப்பிடப்பட்ட பாதுகாப்பு அமைப்பு இல்லை என்பது நிதர்சனமான உண்மை. அன்றாடக் கணினி இயக்கங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருளிலும், ஊடுருவல் தடுப்புத் தீச்சுவர்களிலும் (ஃபயர்வால்ஸ்) இருக்கின்ற குறைபாடுகள் ஊடுருவிகளுக்கு (ஹேக்கர்ஸ்) சாதகமாகி விடுகின்றன. அவர்களுக்கு கணினியின் ஐபி அட்ரெஸ் மட்டும் தெரிந்தால் போதும்; அதை வைத்துக்கொண்டு அவர்களால் வலைத்தளங்களில் தந்திரோபாயத் தாக்குதல்களை ஏற்படுத்த முடியும். ரெட் எக்கோ என்னும் சீன ஊடுருவிக் குழு (ஹேக்கிங் குரூப்) இந்திய துறைமுக இணைய வலைப்பின்னலிலும் ஊடுருவி இருக்கிறது என்று கடந்த மார்ச் மாதம் தெரிய வந்துள்ளது.
தேசத்தின் ஒற்றுமைப் பலத்திற்கு ஊறு விளைவிக்கிறது என்று இந்தியா சீனாவின் 118 செயலிகளைத் தடைசெய்தது. நிலைமை முற்றிப் போவதற்கு முன்பு சீனா தொடர்ச்சியாக இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டது. சீனாவின் ஷென்ஷென் பகுதில் இயங்கும், தரவுகள் திருடும் ஷென்ஹூவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி என்னும் நிறுவனம் பிரதானமான இந்திய அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரைப் பற்றிய தரவுத்தளம் ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறது.
கடினப் பொருட்கள் (ஹார்ட்வேர்) மூலமாக தீய மென்பொருளை (மேல்வேர்) பரப்புவதோடு நில்லாமல், சீனா செயலிகள் மூலமாகவும், தரவுத் தோண்டல் மூலமாகவும் இந்தியாவுக்கு தொல்லை கொடுக்க விடாமுயற்சியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
உலகமே கோவிட்-19 என்னும் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது, சுகாதார, தடுப்புமருந்து நிறுவனங்கள் மீது ஆகப்பெரிய இணையத் தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தத் தாக்குதல்களின் பின்புலம் சீனா அல்லது ருஷ்யா என்பது அதிர்ச்சியான தகவல். இந்தியாவின் விசயத்தில், பாரத் பயோடெக், மற்றும் செரம் இன்ஸ்டிடியூட் ஆகிய கரோனா நோய்த் தடுப்புமருந்து உற்பத்தி நிறுவனங்கள் சீனாவின் அச்சுறுத்தல் குழுவான ஸ்டோன் பாண்டாவால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டிருகின்றன.
இந்த கணினி ஊடுருவிகள் (ஹேக்கர்ஸ்) ஆந்திரப் பிரதேச சாலை வளர்ச்சி கழகத்தையும், இந்திய ரயில்வே உணவு, சுற்றுலாக் கழகத்தையும், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தையும், ரயில்வே தகவல் அமைப்புகளின் நிலையத்தையும் குறிவைத்து தாக்க முற்பட்டன. கணினி அவசரகால எதிர்வினைக் குழு (கம்பியூட்டர் எமெர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் டீம் – சிஈஆர்டி) இந்தத் தாக்குதல் முனைப்பைக் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களை உஷார்ப்படுத்தியது. ஊழியர்களின் மின்னஞ்சல்களை ஊடுருவி அவர்களை ஏமாற்றி தகவல்களைத் திருடி அதன்பின்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஆகப்பெரிய மின்னணு வலைப்பின்னல்களுக்குள் ஊடுருவ முயற்சி செய்தன இந்த ஹேக்கர்கள்.
இணையப் பாதுகாப்புக் கட்டமைப்பைச் சீர்படுத்த வேண்டிய நேரம் இது
உலகத்தின் ஆகப்பெரிய வல்லரசாக மாறுவதற்கு சீனா காய்களை வேகவேகமாக நகர்த்திக் கொண்டிருக்கிறது. ருஷ்யா, பாகிஸ்தான், சீனா, கொரியா ஆகிய நாடுகளிலிருந்து ஏவப்படும் மின்னணுத் தாக்குதல்களிலிருந்து அரசு, பொது நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கு இந்தியா தானாகவே முன்வந்து செயல்பட்டதில்லை. மின்னணு இந்தியா (டிஜிட்டல் இந்தியா) என்னும் திட்டத்தை வலுப்படுத்துவதற்கும், இணையத் தாக்குதல்கள் மீது வலுவான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கும் அவசரகாலத் தேவை இன்று உருவாகி விட்டது.
இணையப் பாதுகாப்பிற்கும், அது சம்பந்தமான அமைப்புகளுக்கும் குறிப்பிட்ட நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டியது அவசியம். தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்கு ஊழியர்களுக்கு வெறுமனே பயிற்சி கொடுப்பதோடு நிறுத்தி விடாமல், அவர்களுக்குள் ஓர் அடிப்படை இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
சீனாவை எல்லையில் மட்டும் அடக்கி வைப்பது போதாது; எங்கெங்கும் வியாபித்திருக்கும் அந்தத் தேசத்தின் மின்னணு உலகப் போரையும் எதிர்கொண்டு அதை பலமாக வெற்றி கொள்வதிலும் இந்தியா தன் கவனத்தை முழுமையாகக் குவிக்க வேண்டும்.
இதையும் படிங்க: 'அலிபாபா'வுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம்: காரணம் என்ன?