பர்கிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2022 ல், 73 கிலோ எடை பிரிவில் பளுதூக்கும் வீரர் அச்சிந்தா ஷூலி விளையாடி வருகிறார். இந்நிலையில், நேற்று (ஜூலை 31) பர்கிங்ஹாமில் உள்ள என்இசி அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில், இந்திய பளுதூக்கும் வீரர் ஷூலி 313 கிலோ (143கிலோ + 170கிலோ) பளு தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். இதில் ஸ்னாட்ச் முறையில் 143 கிலோவும் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 170 கிலோவும் ஷூலி தூக்கினார்.
ஷூலிக்கு தனது கடும் போட்டியைக் கொடுத்த மலேசியாவின் எர்ரி ஹிதாயத் முஹம்மது, 303 கிலோ (138 கிலோ + 165 கிலோ) தூக்கி, இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனையடுத்து, கனடாவின் ஷாட் டார்சிக்னி மொத்தம் 298 கிலோ (135 கிலோ + 163 கிலோ) தூக்கி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
இந்த வெற்றி குறித்து பளுதூக்கும் இளம் வீரர் அச்சிந்தா ஷூலி கூறுகையில், " நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பதக்கத்திற்காக நான் கடினமாக உழைத்தேன். எனது சகோதரர், அம்மா, எனது பயிற்சியாளர் மற்றும் ராணுவத்தினரின் பல தியாகங்கள் இந்த பதக்கத்திற்கு சென்றுள்ளது. இது என் வாழ்க்கையில் நடந்த முதல் முக்கிய நிகழ்வு.
நான் இங்கு வருவதற்கு உதவியவர்களுக்கு நன்றி கூறுகிறேன். இந்த பதக்கம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் எனக்கு உதவும். இந்தப் பதக்கத்தை எனது மறைந்த தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். எனது சகோதரரும், நான் தவறு செய்தால் என்னை அறையும் எனது பயிற்சியாளருமான விஜய ஷர்மா ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கம்