ராஜஸ்தான்: மும்பையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வரப்பட்டதாக தகவல் கிடைத்தது. ஜோத்பூர் வந்தடைந்த விமானத்தை சுங்கத் துறையினர் சோதனையிட்டனர், ஆனால் அதில் எதுவும் கிடைக்கவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களிடமிருந்தும் தங்கத்தை மீட்க முடியவில்லை.
ஆனால், இருவரிடமிருந்தும் கிடைத்த ஆதார் அட்டைகள் போலியானது எனத் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் விமான நிலைய காவல் நிலையத்தில் சுங்கத்துறையினர் ஒப்படைத்தனர். மோசடி வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சிங்கப்பூரைச் சேர்ந்த கம்ரான் மகன் அப்துல் கனி ரேடியோவாலா (51), மும்பையைச் சேர்ந்த நூர் முகமது மகன் முகமது ரபிக் லக்டவாலா ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சிங்கப்பூரிலிருந்து பல முறை இந்தியாவிற்கு தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மும்பை விமான நிலையத்தில் கண்டிப்பு அதிகமாக இருப்பதால் அவர்கள் தங்கத்தை விமானத்தின் சீட்டில் மறைத்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வருவார்கள்.
மறுநாள் அந்த விமானம் எந்த ஊருக்குச் செல்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு அதே விமானத்தில் அதே இருக்கைகளை புக் செய்கின்றனர். பின்னர், அந்த விமானம் எங்கு தரை இறங்குகிறதோ அங்கு இறங்கி கடத்தப்பட்ட தங்கத்தை வெளியே எடுத்துச்செல்கின்றனர்.
இதே திட்டத்தை தான் தற்போதும் செயல்படுத்த முயன்றனர். ஆனால், இதனை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, இருவரும் வந்த விமானத்தை சோதனை செய்தபோது அதில், 1 கிலோ எடையுள்ள தங்கம் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, அவர்கள் இருக்கையில் மறைத்து வைத்திருந்த 3 கிலோ தங்கத்தை மீட்ட சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து குற்றவாளிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பசை வடிவில் தங்கம்.. விமான நிலைய அதிகாரிகள் ஷாக்!