ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு இளைஞர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள பரண் மாவட்டத்தில் இரு சமூகத்தினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. கடைகள், வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. மற்ற சில கடைகள் சூறையாடப்பட்டன.
இதையடுத்து, பரண் மாவட்டத்திலுள்ள சாப்ரா நகரில் ஊரங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், இணைய சேவையும் முடக்கப்பட்டது. தொடர்ந்து பரண் மாவட்டம் முழுவதும் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
மண்டல காவல் தலைவர் (ஐஜி), மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் அடங்கிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இது குறித்து காவல் துறை தரப்பில், "வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இருபிரிவினர் ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 12) ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர்.
ஆறு கடைகளுக்குத் தீவைத்தனர். தொடர்ந்து அங்கு சுற்றியிருந்த வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர். மேலும், சில கடைகள் சூறையாடப்பட்டன, மோதலைத் தடுக்க காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பரண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினீத் பன்சால் கூறுகையில், "இது மிகவும் பதற்றமான நிலைமை. சமூக விரோத கும்பல்களால் தொடரும் இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம்" என்றார்.
தொடர்ந்து நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் சாப்ரா நகரில் ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவித்தார். தொடர்ந்து சரக ஆணையர் இணைய சேவை முடக்கப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
பொதுமக்கள் காவல் நிலையத்திற்குச் சென்று குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவிடுத்தனர். மோதல் தொடர்பாக காவல் துறையினர் மூன்று இளைஞர்களை காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். மேலும், இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.