புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளரும், சட்டப்பேரவை கட்சித் தலைவருமான அன்பழகன் மாநில தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நோய்த்தொற்று ஏற்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் நுரையீரல் பாதிப்பினால் சிகிச்சை மேற்கொண்டுவருபவர்களுக்கு அவசியமான ரெம்டெசிவிர் மருந்து தடையின்றி கிடைக்காததால், அவர்கள் மனதளவிலும் பாதிக்கப்படுகிறார்கள்.
ரெம்டெசிவிர் மருந்து அவசியமான ஒன்று என மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. எனவே அவற்றைத் தடையின்றி கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு தனியார் மருத்துவமனையிலும் 300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி முழுவதும் உள்ளிருப்பு நோயாளிகள் சுமார் 500-க்கும் குறைவானவர்களே சேர்க்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான தொற்று நோயாளிகளை உள்ளிருப்பு நோயாளிகளாக சேர்க்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுவருகிறார்கள்.
இதில் உள்ள உண்மை நிலையை துணைநிலை ஆளுநர் உணர்ந்து, நோய்த்தொற்று உள்ளவர்களைச் சிகிச்சையுடன் தனிமைப்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களைக் குறைந்தது ஐந்து தினங்களாவது தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
ஒரே அறையை மட்டும் கொண்ட வீட்டில் வசிப்பவர்கள் எவ்வாறு குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்ள முடியும். எனவே, தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற உள்ளாட்சித் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும். அதற்காக உயர்மட்ட குழுவை அறிவிக்க வேண்டும்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தகுந்த இடைவெளியை அரசு உருவாக்க வேண்டும். சந்தை, சுற்றுலா திடல்கள், காய்கறி அங்காடிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் தகுந்த இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலாத் தலங்கள் முழுமையாக மூடப்பட வேண்டும்.
இரவு நேர 10 மணியிலிருந்து காலை 5 மணி வரையிலான ஊரடங்கால் எந்தப் பயனும் ஏற்படாது. தேவைப்பட்டால் பகல் நேரத்தில் மதியம் 3 மணியிலிருந்து இரவு வரை ஊரடங்கு அமுல்படுத்த வேண்டும். இக்கொடிய தொற்றுக் காலத்தில் தேவையற்ற வீண் புகார்களைக் கூறி அரசியல் கட்சிகள் அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் முன்னுக்குப்பின் முரணான கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் முதலமைச்சராக இருக்கும்போது இறந்தவர் குடும்பத்திற்கு ஒரு லட்சம் அளிக்கப்படும் என்றார்.
700-க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றால் மரணமடைந்த நிலையில் துணைநிலை ஆளுநர் மனிதாபிமான அடிப்படையில் மரணமடைந்தவர்கள் குடும்பத்திற்கு போதிய நிதி அளிக்க வேண்டும். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிதியுதவி செய்ய வேண்டும்.
துணைநிலை ஆளுநர் போர்க்கால அடிப்படையில் ராணுவ கட்டுப்பாட்டுடன் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு நோய்த்தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்" என்றார்.