ராஞ்சி :ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் அரசு நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அரசிடமே விற்று லட்சக்கணக்கில் நஷ்டஈடு பெற்ற மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிர்சா முந்தா விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக கடந்த 2011ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மூன்று பேரிடம் இருந்து விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அரசு நிலம் கையகப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அந்த மூன்று பேரும் அரசு நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அதை அரசிடமே விற்று ஏறத்தாழ 30 லட்ச ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிலம் கையகப்படுத்தும் அதிகாரி அஞ்சனா தாஸ் கோடாவளி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
மேலும் மோசடியில் ஈடுபட்ட நபர்களின் அடையாளங்கள் மற்றும் தகவல்களை அவர் வெளியிட்டு உள்ளார். அதில் ராஜ்குமார் ஸ்ரீவத்சவா என்பவர் அரசின் 0.03 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அரசிடமே விற்று 2 லட்சத்து 54 ஆயிரத்து 802 ரூபாய்க்கு விற்றதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், முகேஷ் குமார் சின்ஹா என்பவர், 0.169 ஏக்கர் அரசு நிலத்தை கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி போலி பத்திரம் மூலம் அரசுக்கு விற்று 14 லட்சத்து 35 ஆயிரத்து 386 ரூபாய் நஷ்டத் தொகையாக பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரவிந்திர குமார் என்பவர் 0.18 ஏக்கர் நிலத்தை 15 லட்சத்து 28 ஆயிரத்து 813 ரூபாய்க்கு அரசிடம் விற்றதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மூன்று பேர் சேர்ந்து அரசு நிலத்தை அரசிடமே விற்று ஏறத்தாழ 30 லட்ச ரூபாய் வரை மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஞ்சியில் இது போன்று பல்வேறு நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : போலீசாரிடமே கைவரிசை காட்டிய கொள்ளையன்... துப்பாக்கியை திருடி மரத்தில் ஏறி அலப்பறை!