ஹைதராபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் மூன்று நாட்களில் தொடங்க உள்ளது. இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி.
மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர், 46 நாட்களில் 48 ஆட்டங்களாக நடைபெற உள்ளது. 2023ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள அதிக வயதான மற்றும் அனுபவம் நிறைந்த 5 வீரர்கள் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்...
1. வெஸ்லி பாரேசி (Wesley Barresi)
வெஸ்லி பாரேசி நெதர்லாந்து கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 போட்டியில் விளையாடும் மிகவும் வயதான வீரர் ஆவார். இவரது வயது 39 ஆகும். 2010ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக தனது முதல் சர்வதேச ஆட்டத்தைத் தொடங்கினார். வெஸ்லி பாரேசி சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். இவர் 45 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெற்று 44 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ளார். 1 சதம் 8 அரை சதங்கள் அடித்துள்ள இவர் மொத்தமாக 1,193 ரன்கள் எடுத்து 30.58 சராசரி ரன்களையும் 78.48 ஸ்டிரைக் ரேட் பெற்றுள்ளார். இவரது அதிகபட்ச ரன்கள் 137 ஆகும்.
2. ரோலோஃப் எராஸ்மஸ் வான் டெர் மெர்வே (Roelof Erasmus Van Der Merwe)
இந்த பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றுள்ள வீரரும் நெதர்லாந்தை சேர்ந்தவர் தான். அவர் பெயர் ரோலோஃப் எராஸ்மஸ் வான் டெர் மெர்வே. இவரது வயது 38 ஆகும். இவர் முதலில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். அதற்குப் பின்னர் 2019ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்காக விளையாடத் தொடங்கினார். சுழற்பந்து வீச்சாளரான இவர் 16 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை பெற்று 36.05 சராசரியை கொண்டு உள்ளார்.
3. முகமது நபி (Mohammad Nabi)
முகமது நபி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர் ஆவார். இவர் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். இவரது வயது 38 ஆகும். இவர் இதுவரை 147 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 131 போட்டிகளில் பேட்டிங் செய்து 3,153 ரன்கள் எடுத்து 27.18 சராசரி பெற்றுள்ளார். இதுவரை 1 சதம் 16 அரை சதம் அடித்துள்ளார். மேலும் இவரது பந்துவீச்சு மூலம் 154 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 30 ரன்கள் விட்டுகொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியதே இவரது சிறந்த பந்துவீச்சாக கருதப்படுகிறது.
4. மஹ்முதுல்லாஹ் (Mahmudullah)
மஹ்முதுல்லாஹ் வங்கதேசம் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஆவார். இவரது வயது 37 ஆகும். இவர் 221 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 192 போட்டிகளில் பேட்டிங் செய்து 5,020 ரன்கள் குவித்து சராசரியாக 35.35 ரன்கள் எடுத்துள்ளார். 3 சதம் 27 அரை சதம் அடித்து உள்ளார். இவரது அதிகபட்ச ரன்கள் 150 ஆகும். மேலும் பந்து வீச்சில் 148 போட்டிகளில் 82 விக்கெட்டுகள் எடுத்து 5.21 விகிதத்தில் உள்ளார். இவரது சிறந்த பந்து வீச்சின் மூலம் 4 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் எடுத்துள்ளார்.
5. ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin)
ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணியின் வயதான வீரர் ஆவார். இவரது வயது 37 ஆகும். நடப்பு உலக கோப்பை சீசனில் அக்சர் படேலுக்குப் பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் சிறந்து சுழற் பந்துவீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர். அஸ்வின் 115 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 155 விக்கெட்டுகள் எடுத்து 4.94 விகிதம் சராசரியை கொண்டு உள்ளார். இவரது சிறந்து பந்து வீச்சின் மூலம் 25 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் எடுத்து உள்ளார். பேட்டிங்கில் 63 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 707 ரன்கள் 1 அரை சதம் அடித்து உள்ளார். பேட்டிங்கில் இவரது அதிகபட்ச ரன்கள் 65 ஆகும்.
இதையும் படிங்க: பிடி உஷாவின் 40 ஆண்டுகால சாதனை சமன்! ஆசிய விளையாட்டில் ஜொலிக்கும் தமிழக வீராங்கனை!