லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவைச் சேர்ந்த பட்டியலின சிறுமிகள் மூவர் வயலுக்குப் புல்லறுக்கச் சென்றுள்ளனர். வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் மூவரையும் தேடி வயலுக்குச் சென்றுள்ளனர். அப்போது, மூன்று சிறுமிகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மயக்கநிலையில் கிடந்துள்ளனர்.
அவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு சிறுமி உயிருக்குப் போராடி வருகிறார். இந்த சம்பவம் குறித்து பேசிய உன்னாவ் காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்த் குல்கர்னி, "சிறுமிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுமியின் குடும்பத்தினர் அளித்த தகவலின் படி, சிறுமிகள் அனைவரின் வாயிலும் நுரை தள்ளியுள்ளது. அவர்களது கழுத்து துணியால் நெருக்கப்பட்டிருப்பது போலத் தெரிகிறது எனக் கூறியுள்ளார்.
மேலும், சிறுமிகளின் பெற்றோர் விருப்பத்திற்கேற்ப இன்று அவர்களது உடல் தகனம் செய்யப்படும். இந்த விவகாரத்தில் பெற்றோர்களுக்கு காவல்துறை தரப்பில் எந்தவொரு அழுத்தமும் தரப்படவில்லை. கிராமத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கான்பூர் மருத்துவமனையில் வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கும் மூன்றாவது சிறுமியின் உடலில், விஷம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே, உயிரிழந்த சிறுமிகளின் உறுப்புகள் சில பாதுகாக்கப்பட்டுள்ளன. சிறுமிகளின் கைகள் கட்டப்பட்டிருப்பதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால், எங்களது விசாரணையில் அதற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்றார். இதன் மூலம், காவல்துறையினர் தகவலுக்கும், சிறுமியின் குடும்பத்தினரின் கூற்றுகளுக்கும் முரண்பாடு உள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து விசாரிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.