கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் சிஜின். இஸ்லாமியரான இவர் கிறிஸ்தவரான ஜாய்ஸ்டீனா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்தப் பெண் கடந்த 10ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் ஜாய்ஸ்டீனா குடும்பத்தினர் கொடன்சேரி காவல் நிலையத்தில் சிஜின் மீது புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில், தனது மகளை வலுக்கட்டாயமாக சிஜின் கடத்திச் சென்று சட்டவிரோதமாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், பெண்ணை மீட்டுத் தரக்கோரி ஜாய்ஸ்டீனாவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு மாவட்ட செயலர் ஜார்ஜ் எம் தாமஸ், “சிஜின் அப்பெண்ணை திருமணம் செய்துகொண்ட விதம் சரியல்ல. சம்பந்தப்பட்ட இருவரும் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது பெண், பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார்.
இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களான எஸ்டிபிஐ மற்றும் ஜமாத்-இ-இஸ்லாம் உள்ளிட்ட அமைப்புகள் லவ் ஜிகாத்தில் ஈடுபடுவது உண்மைதான். படிப்பறிவு இல்லாத இஸ்லாமியர் அல்லாத பெண்கள் இதில் குறிவைக்கப்படுகின்றன.
சிஜின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். ஆனால் ஜார்ஜ் எம் தாமஸின் கருத்துகளை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. இதுபோன்ற திருமணங்கள் முற்போக்கானவை, சமூகத்திற்கு நல் வழிகாட்டும் என்றார். இருப்பினும் பெற்றோரின் சம்மதமும் திருமணத்துக்கு அவசியம் என்று கூறினார்.
மேலும் ஜார்ஜ் எம் தாமஸ் தனது அறிக்கையில் சில தவறுகள் இருப்பதையும் புரிந்துக்கொண்டார் என மற்றொரு மாவட்ட செயலாளர் பி. மோகனன் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் ஒருவர் லவ் ஜிகாத் சர்ச்சையில் சிக்கியிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : லவ் ஜிகாத் தடை: கேரளத்தை உத்தரப் பிரதேசம் போல் மாற்றுவோம், பாஜக!