கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மூன்று மாத காலம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மானியம் வழங்கியதற்கான மத்திய அரசின் செலவு தொகை 160 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் 2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் இதுகுறித்து மேலும் கூறுகையில், "ஊரடங்கு காலக்கட்டத்தில் மக்கள் தொகையில் மூன்றில் இருவருக்கு உணவு, எரிவாயு ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டதால் அதற்கான செலவு 160 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி நேரடியாக பணம் வழங்கப்பட்டது.
2019-20ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில், உணவு, எரிவாயு, உரம் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கினோம். அதற்காக, 2.28 லட்சம் கோடி ரூபாய் செலவழித்தோம். கரோனா காரணமாக உணவு, எரிவாயு, உரம் ஆகியவற்றுக்கான செலவு தொகை கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டை காட்டிலும் 2.6 மடங்கு அதிகமாகும்.
நடப்பு நிதியாண்டில், மானியம் வழங்கியதற்கான செலவு தொகை இதுவரை இல்லாத அளவுக்கு 5.59 லட்சம் கோடி ரூபாயாக உயரும். அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் ஏற்பட்ட செலவு தொகை 1.15 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 4.22 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது பட்ஜெட் கணக்கை விட 267 விழுக்காடு அதிகமாகும். உரத்தை மானிய விலையில் வழங்கியதற்கான செலவு தொகை 71,000 கோடி ரூபாயிலிருந்து 1.34 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது" என்றார்.