டெல்லி: நடப்பு ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்து 51 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்தியாவுக்கான ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இரண்டு லட்சத்து 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு யாத்ரீகர்கள் எண்ணிக்கை கடுமையாகச் சரிந்துள்ளது.
இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய ஹஜ் கமிட்டி தலைமைச் செயல் அலுவலர் மசூத் அகமத் கான், "தற்போதுவரை 51 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 10ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி எங்கள் அலுவலர்களிடம் தெரிவித்திருந்தார்.
பொதுவாக மாநில அரசின் கோரிக்கையின்படியே கால அவகாசம் நீட்டிக்கப்படும். ஆனால் தற்போதுவரை எந்தக் கோரிக்கையும் வரவில்லை. இதனால் யாத்ரீகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது.
கரோனா பரவல் காரணமாக 18 வயதுக்கு கீழ் இருந்தவர்களின் விண்ணப்பங்களையும், 65 வயதுக்கு மேற்பட்டோரின் விண்ணப்பங்களையும் நாங்கள் ஏற்பதில்லை. பொதுவாக இந்தியாவிலிருந்து இரண்டு லட்சம் யாத்ரீகர்கள் வர அனுமதி வழங்கப்படும். ஆனால் இம்முறை பெருந்தொற்று காரணமாக 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவுள்ளது" என்றார்.
அகமதாபாத், மும்பையிலிருந்து ஹஜ் பயணம் செல்வோருக்கான கட்டணம் மூன்று லட்சத்து 30 ஆயிரம் என்றும், பெங்களூருவிலிருந்து செல்லும் யாத்ரீகர்களுக்கான கட்டணம் மூன்று லட்சத்து 50 ஆயிரம் என்றும், டெல்லி, பெங்களூருவிலிருந்து வருவோருக்கு மூன்று லட்சத்து 60 ஆயிரம், கொல்கத்தாவிலிருந்து செல்ல மூன்று லட்சத்து 70 ஆயிரம், கவுகாத்தியிலிருந்து செல்ல நான்கு லட்சம் எனக் கட்டணம் வசூல் செய்யப்படும்.
இதையும் படிங்க: சரக்கு ரயில் சேவைக்கான புதிய இணையதளம்: பியூஷ் கோயல் தொடங்கிவைப்பு