ஹவேரி (கர்நாடகா): கரோனா தொற்றுப் பரவல் நேரத்தில் போதிய வருமானம் இல்லாததால், கவுரவ விரிவுரையாளர் ஒருவர் பழ வியாபாரம் செய்து வருகிறார்.
பொது முடக்கக்காலத்தில், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்தநேரத்தில், பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தின. இந்தநிலையில், கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்த பெரும்பாலானோர் தங்களது வாய்ப்புகளை இழந்தனர்.
இதன் காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலர் மாற்றுத் தொழிலை நாடினர். அந்தவரிசையில், கர்நாடகாவின் ஹவேரி பகுதியைச் சேர்ந்தவர் சி.கே.பாட்டில். ஹவேரி மாவட்டத்தில் முதல் தரவரிசையிலுள்ள கல்லூரி ஒன்றில், பாட்டில் கவுரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார்.
பெருந்தொற்று பரவலால் வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பாட்டில், தற்போது பழங்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். வருமானம் இன்றி கடும் சிரமத்தை எதிர்கொண்ட அவர், தனது குடும்பத்தைக் காப்பாற்ற தனது தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை சாலையோர கடையில் விற்பனை செய்து வருகிறார்.
மாம்பழ விளைச்சலுக்கான பருவம் முடிவடையும் தருவாயில் இருப்பதால், மாம்பழ விற்பனையை மேலும் தொடர முடியாத சூழலில் இருப்பதாகப் பாட்டில் கவலையில் ஆழ்ந்துள்ளார். பெருந்தொற்று பரவல் காரணமாக, பல்வேறு இளநிலை, முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தினசரி ஊதிய அடிப்படையில் பணிபுரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ