டெல்லி : ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) காலை 9.30 மணிக்குள் 15 வயது முதல் 18 வயது வரைக்குள்ளான 3 லட்சத்து 57 ஆயிரத்து 984 சிறார்கள் கோவிட் தடுப்பூசி வேண்டி கோவின் செயலியில் முன்பதிவு செய்துள்ளனர்.
கோவிட்-19க்கு எதிராக 15-18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவுகள் ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கின. CoWIN என்பது கோவிட்-19 தடுப்பூசி பதிவுக்கான மத்திய அரசாங்க இணையதள போர்டல் ஆகும். இது இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் இயக்கப்படுகிறது.
இந்தப் போர்டலில் இதுவரை 92 கோடியே 18 லட்சத்து 61 ஆயிரத்து 878 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில், 57 கோடியே 37 லட்சத்து 14 ஆயிரத்து 969 பேர் 18-44 வயது வரையிலானவர்கள் ஆவார்கள். மீதமுள்ள 34 கோடியே 77 லட்சத்து 88 ஆயிரத்து 925 பேர் 44 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள். இந்தத் தகவலும் கோவின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு இணங்க, நாடு முழுக்க வருகிற திங்கள்கிழமை (ஜன.3) முதல் 15-18 வயதுடைய சிறார்களுக்கு COVID-19 தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
15-18 வயதுக்குள்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் சூழலில், 'கோவாக்சின்' மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும், கூடுதல் அளவு 'கோவாக்சின்' அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்படும் என்றும் மத்திய சுகாதார செயலாளர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தெரிவித்துள்ளார்.
2007 அல்லது அதற்கு முந்தைய ஆண்டு பிறந்தவர்கள் இந்த பிரிவின் கீழ் தடுப்பூசி பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மேற்கு வங்க அமைச்சருக்கு கரோனா பாதிப்பு!