தடுப்பூசி ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றி வருகிறது. பல வகையான கொடிய நோய்களுக்கு தீர்வாக அமைந்துள்ளது. முக்கியமாக, உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்த போலியோ நோயானது தடுப்பூசி மூலமாக தான் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தடுப்பூசிகள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து புதிய நோய்களால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்காக பார்மா ஆலோசகரான ஸ்வரூப் பாண்டாவுடன் கலந்துரையாடினோம்.
அப்போது ஸ்வரூப் பாண்டா கூறியதாவது:-
தற்போது வரை 50க்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசிகள் சோதனை ஓட்டத்தில் உள்ளன. கரோனா தொற்றை எதிர்த்துபோராடும் சக்தி நமது உடலில் இருந்தால், கரோனா பாதிப்பு ஏற்படுவது கணிசமாக குறையும். அத்தகைய பணியை தான் தடுப்பூசிகள் செய்கிறது. இதனால், அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படாமல் காப்பாற்ற முடிகிறது.
ஆய்வு முடிவுகளின்படி, கரோனா தடுப்பூசிகளால் ஏற்படும் விளைவுகள் குறைவாக தான் உள்ளது. ஒரு தடுப்பூசி அமலுக்கு வருவதற்கு முன்பு, பல வகையான பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்படுகிறது. கோவாக்சின் 30,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மீது சோதனை செய்யப்பட்டுள்ளது, இது நாட்டிலேயே மிக உயர்ந்ததாகும். எனவே, தடுப்பூசி பாதுகாப்பில் எந்தவிதமான குழப்பமும் மக்களுக்கு வேண்டாம்.
தேசிய நிபுணர் குழுவின் (NEGVAC) வழிகாட்டுதலின் படி, COVID-19 தடுப்பூசி முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்தாண்டிற்குள், 30 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசிகள் சென்றடையும். அந்தவகையில் இவர்கள் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளக் கூடாது.
எப்போது கரோனா தடுப்பூசி எடுக்கக்கூடாது:
- காய்ச்சல்
- இரத்தப்போக்கு
- தோல் பாதிப்பு
- கர்ப்பம்
- தாய்ப்பால் கொடுக்கும் நிலையில்.
- ஏற்கனவே COVID-19 தடுப்பூசி எடுத்திருந்தால்
- இதய பிரச்னை
தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மருத்துவரை அணுகி தெளிவுப்பெற்றுக்கொள்வது நல்லது ஆகும்.
இவ்வாறு ஸ்வரூப் பாண்டா கூறினார்.