இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கரோனாவுக்கு எதிரான போரின் முக்கிய திருப்புமுனையாக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகள், வெளியிடப்படாமலேயே அனுமதி வழங்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கரோனா வைரஸை தடுக்க கோவாக்சின் தடுப்பூசி 81 விழுக்காடு பயனளிப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இது உருமாறிய கரோனாவுக்கு எதிராக செயலாற்றுவதாகவும், தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "வைரஸ் தாக்கப்படுவதற்கு முன்பு இரண்டாவது டோஸ் போட்டு கொள்ளும் பட்சத்தில் கோவிட் - 19ஐ தடுக்க கோவாக்சின் 81 விழுக்காடு பயனளிக்கிறது. இதுகுறித்த முடிவுகளை நிபுணர் குழு இன்னும் ஆராயவில்லை. மற்ற விவரங்கள் வெளியிடும் போது மேலும் பல தகவல்கள் பகிரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
87 பேரை ஆய்வுக்கு உட்படுத்தி இடைக்கால ஆய்வு முடிவுகள் ஆராயப்படும். இறுதி கட்ட ஆய்வு முடிவுகளுக்காக 130 பேரை ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளோம். இரண்டாம் மற்றும் இறுதி ஆய்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பு நிபுணர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல், 18 முதல் 98 வயதுக்குட்பட்ட 25 ஆயிரத்து 800 தன்னார்வலர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த ஆய்வில், மற்ற நோய்களால் பாதிப்படைந்த 4 ஆயிரத்து 533 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 2 ஆயிரத்து 433 பேரும் தன்னார்வலராக கலந்து கொண்டனர். பிரிட்டனிலிருந்து பரவிய உருமாறிய கரோனா வைரஸூக்கு எதிராக கோவாக்சின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என தேசிய கிருமியியல் மையம் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது எனவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.