வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் அளித்த புகாரின் பேரில், கடந்த 2016ஆம் ஆண்டு மௌலானா ஜார்ஜிஸ் என்ற மதகுருவுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, அவர் கடந்த 2013ஆம் ஆண்டு வாரணாசியில் நடந்த மதக் கூட்டம் ஒன்றில் மௌலானா ஜார்ஜிஸ்-ஐ சந்தித்துள்ளார். இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில், திருமணம் செய்து கொள்வதாகக்கூறி மௌலானா ஜார்ஜிஸ் அந்த பெண்மணியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஆபாசமாக வீடியோவும் எடுத்துள்ளார். வீடியோவை காட்டி மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அந்த பெண்ணின் வீட்டுக்கே சென்று, அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்மணி திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டும், மௌலானா ஜார்ஜிஸ் மறுத்துள்ளார். இதையடுத்து, அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கு வாரணாசி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மௌலானா ஜார்ஜிஸ் குற்றவாளி என்று நேற்று (செப்.21) தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. மௌலானா ஜார்ஜிஸுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக இன்று மௌலானா ஜார்ஜிஸ் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட போது, அவர் சிரித்துக்கொண்டே நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தான் நிரபராதி என்றும், தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றம் செல்லப்போவதாகவும் கூறினார்.
பாலியல் வன்கொடுமை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட போதும் மிகவும் அலட்சியமாக பதிலளித்த இவரது நடவடிக்கை, பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகளின் தீவிரத்தின் மீது கேள்வி எழுப்பும் வகையில் இருக்கிறது.
இதையும் படிங்க: உ.பி.யில் நிர்வாணமாக நடந்து சென்ற சிறுமி - நடந்தது என்ன?