கொச்சி: கேரள மாநிலம், எர்ணாகுளத்தை அடுத்துள்ள களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா சர்வதேச மாநாட்டு மைதானத்தில் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி நடைபெற்ற மதவழிபாட்டு நிகழ்ச்சியில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியது. அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக என்.எஸ்.ஐி (NSG) மற்றும் என்.ஐ.ஏ (NIA) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, சந்தேகத்திற்கிடமாக மதவழிபாட்டு பொதுக் கூட்டம் நடைபெறும் மையத்திற்கு நீல நிற கார் ஒன்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கார் வெடிகுண்டு சம்பவத்திற்கு தொடர்புடையதா என்றும் விசாரித்து வந்தனர். இதனிடையே, களமச்சேரி குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு நான் தான் காரணம் எனக் கூறி டொமினிக் மார்ட்டின் என்பவர் திருச்சூர் கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் டொமினிக் மார்ட்டினிடம் ஏடிஜிபி தலைமையிலான உயர்மட்ட காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதன்பிறகு குண்டு வெடிப்பு சம்பவத்தில் சரணடைவதற்கு முன் டொமினிக் மார்ட்டின் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்தது. அந்த வீடியோவில், "யோகோவா சாட்சி குழு கற்றுக் கொடுப்பவை தனக்குப் பிடிக்காததால் குண்டு வைத்ததாகவும், பள்ளிகளில் தேசிய கீதம் பாடுவது தவறு என யோகோவா சாட்சி குழு கற்றுத் தருகிறது எனவும், யோகோவா சாட்சி குழுவைத் தவிர மற்ற அனைவரும் மோசமானவர்கள்.
தேசிய கீதத்தைப் பாடக்கூடாது என கற்றுக் கொடுக்கும் குழுவில் வளரும் குழந்தை எதிர்காலத்தில் என்னவாகும் எனக் கேள்வி எழுப்பி அந்த கூட்டத்திற்கு வரும் அனைவரும் தேசத்திற்கு எதிரானவர்கள் எனவே அவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் என்பதால் குண்டு வைத்ததாக" தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து டொமினிக் மார்ட்டினை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என போலீசார் மனு அளித்தனர். அதில், அவரது வருமான ஆதாரங்கள், சர்வதேச தொடர்புகள் மற்றும் மேலும் பல விஷயங்களை விசாரிக்க வேண்டும் எனவும், மேலும் ஆதாரங்களை சேகரிப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவரை குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு, கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி, மார்ட்டின் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், கேரள நீதிமன்றம் போலீசாரின் கோரிக்கையை ஏற்று குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மார்ட்டினை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.