டெல்லி: சீனர்களுக்கு விசா நீட்டிப்பு செய்ய 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக, கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான சென்னை, மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட 10 இடங்களில் சிபிஐ அலுவலர்கள் கடந்த 17ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் எஸ்.பாஸ்கர் ராமனை சிபிஐ கைது செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தரப்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (மே 20) நீதிபதி எம்.கே.நாக்பால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, சிபிஐ தரப்பு கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யும் பட்சத்தில் அவருக்கு மூன்று வேலை நாட்களுக்கு முன்னதாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், கார்த்தி சிதம்பரம் தற்போது வெளிநாட்டில் இருப்பதால், இந்தியா வந்த பிறகு 16 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு வர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது - சிபிஐ அதிரடி