சங்கரெட்டி : தெலங்கானாவில் பிளாக் மேஜிக் எனப்படும் பில்லி சூனிய பயிற்சியில் ஈடுபட்டதாக கூறி தம்பதியை மரத்தில் கட்டி வைத்து ஊர் மக்கள் அடித்து உதைத்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சங்கரெட்டி மாவட்டம் சதாசிவபேட் அடுத்த கொல்குரு கிராமத்தை சேர்ந்த தம்பதி யாதையா - சியாமாம்மா. தம்பதி இருவரும் சேர்ந்து பில்லி சூனியம் வைப்பது குறித்த பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் ஊர் முழுவதும் பரவியதாக சொல்லப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் வைத்து தம்பதி பிளாக் மேஜிக் பயிற்சி செய்ததாக தகவல் பரவிய நிலையில் தம்பதியின் வீட்டிற்கு சென்ற கிராம மக்கள், அவர்களை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும், தம்பதியை வீட்டில் இருந்து வெளியே இழுத்துச் சென்று ஊர் நடுவில் உள்ள மரத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த தம்பதியை பத்திரமாக மீட்டு உள்ளனர். ஊர் மக்கள் தாக்கியதில் தம்பதிக்கு மோசமான காயம் எதுவும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மரத்தில் கட்டி வைத்து தம்பதியை கிராம மக்கள் துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : Bhopal: நாய் போல் குரைக்குமாறு இளைஞர் துன்புறுத்தல்... 3 இளைஞர்கள் கைது!