டெல்லி: பதஞ்சலி நிறுவனத்தில் கரோனா மருந்தான ‘கரோனில்’க்கு அனுமதி கிடைத்துள்ளது.
இதன் அறிமுக நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கலந்துகொண்டனர். ஆயுர்வேத ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த மருந்து குறித்த முதல் அறிவியல் ஆய்வுக் கட்டுரையை தனது அமைப்பின் சார்பில் பாபா ராம்தேவ் வெளியிட்டார்.
ஜூன் 2020 இல், பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் கொரோனில் மற்றும் ஸ்வாசாரி மருந்தை அறிமுகப்படுத்தியது. இது SARS-CoV-2 வைரஸால், அதாவது கரோனா வைரசால் ஏற்படும் சுவாச நோய்க்கான முதல் ஆயுர்வேத சிகிச்சை என்றும் நிறுவனம் கூறியது. இந்த மருந்து, 3-7 நாட்களுக்குள் 100 விழுக்காடு கோவிட்-19 நோயை குணப்படுத்தும் என்றும் ராம்தேவ் கூறியிருந்தார்.
உலகளவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கொலம்பியா, மொரீஷியஸ், பங்களாதேஷ், இலங்கை மற்றும் சீனா ஆகிய பல நாடுகள் இந்தியாவின் ஆயுர்வேதத்தை தங்கள் வழக்கமான மருத்துவ முறையில் நடைமுறைப்படுத்தியுள்ளன என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பெருமிதம் தெரிவித்தார்.