அமராவதி: கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் உயிரிழப்பு சம்பவம் கடந்த சில நாள்களாக மக்களின் மனதை பதைபதைக்க வைத்து வருகிறது. மருத்துவ வசதிகள் இன்றி, படுக்கை வசதியின்றி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனை வளாகத்திலே ஏராளமானோர் உயிரிழந்த செய்திகளை அறிந்து உறைந்துள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தில் மேலும் ஒரு இரக்கமற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மண்டசா மண்டலத்திலுள்ள காசிபுகா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாள்களாக கரோனா அறிகுறிகளுடன் நோய்வாய்ப்பட்டிருந்தார். இவருக்கு திடீரென மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து குடும்பத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருந்துவர்கள் ஆக்சிஜன் அளவு 35 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய விரைந்து சி.டி.ஸ்கேன் எடுத்து வருமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, வேறொரு மருந்துவமனையில் ஸ்கேன் எடுத்துவிட்டு மருத்துவமனைக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்த அவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆட்டோவிலேயே உயிரிழந்தார்.
இதனால் அச்சமடைந்த ஆட்டோ ஓட்டுநர், உயிரிழந்த பெண்மணியின் உடலை சாலையிலேயே வைத்து விட்டு சென்றுள்ளார். இதையடுத்து, ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த பெண்மணியின் குடும்பத்தினர் இதனைக் கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.
தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை தாங்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் வைத்து சுமார் 15 கி.மீ வரை பயணித்து வீட்டிற்கு கொண்டு சென்றனர். நாட்டில் நிலவும் கரோனா அச்சுறுத்தல் மக்களை ஒருவித உயிர் பயத்திற்கு தள்ளி, உயிரிழந்தவரை சாலையிலேயே இறக்கி வைத்துவிட்டு வருமளவு மனிதாபிமானத்தை இழக்க வைத்து வருகிறது.