கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள களாத்திப்பேடி பகுதியில் அமைந்துள்ளது வீட்டு அலங்காரப் பொருள்களை விற்பனை செய்யும் கடையான ’கரோனா’.
இந்தக் கடையை ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் தொடங்கிய கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட தொழிலதிபர் ஜார்ஜ், இந்தக் கரோனா பெருந்தொற்றுக் காலத்தின் மத்தியில், தனது கடை மக்களின் கவனத்தை இவ்வாறு ஈர்க்கக் கூடும் என நிச்சயம் எண்ணியிருக்க மாட்டார்!
”’கரோனா’ எனும் எனது கடையின் பெயர் காரணமாக, இந்தக் கரோனா பெருந்தொற்றுக் காலத்தின் மத்தியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் எங்கள் கடைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் எனது வியாபாரமும் சிறப்பான முறையில் செழித்து வளர்ந்து வருகிறது” என ஜார்ஜ் இது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்.
செடிகள், பானைகள், விளக்குகள் உள்ளிட்ட பல வீட்டு அலங்காரப் பொருள்களும் இவரது கடையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. லத்தீன் மொழியில் கரோனா என்றால் 'crown' - ’கிரீடம்’ எனப் பொருள். இதனை அடிப்படையாகக் கொண்டே இப்பெயரை ஜார்ஜ் தனது கடைக்கு சூட்டியுள்ளார்.
கரோனா பெருந்தொற்றின் மத்தியில் பலரது வியாபாரமும் முடங்கியுள்ள நிலையில், தனது கடையின் பெயர் காரணமாக வாடிக்கையாளர்களிடம் கவனம் பெற்று, தனது வியாபாரம் சிறப்பான முறையில் செழித்து வளர்ந்துவருவது ஜார்ஜை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க : சுற்றுப்புறத்தை பாழாக்கும் மதுபாட்டில்கள்- பயனுள்ளதாக மாற்றும் பட்டதாரி பெண்!