உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று சுமார் இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதால் இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது நோய் பரவல் குறைந்து வருகிறது.
இருப்பினும் கேரளாவில் மட்டும் தொற்றுப் பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் இது கரோனா மூன்றாம் அலையின் தொடக்கமாக இருக்கலாம் என மக்கள் அச்சப்படுகின்றனர்.
இந்நிலையில் கரோனா மூன்றாம் அலை குறித்தும், எப்போது தொற்று குறையும் என்பது குறித்து தேசிய நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு இயக்குநர் சுஜித் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கரோனா சாதாரண தொற்றுகள் போல மாறி, சிகிச்சையின் மூலம் குணமாக்கும் நோயாக மாறுவது தான் பெருந்தொற்று முடிவதன் தொடக்க நிலை.
கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை தந்து எளிதாக குணமாக்கும் நிலை ஏற்படும். தற்போது இந்தியாவில் 75 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நிலையில், குறைந்தது 50 கோடி பேர் தொற்று எதிர்ப்பாற்றலை பெற்றுவிட்டனர். இன்னும் ஆறு மாதங்களில் இந்தியாவில் பெருந்தொற்று முடிவுக்கு வர த்தொடங்கிவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.