தெலங்கானா: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில், கடந்த 28-ம் தேதி 17 வயது சிறுமி சொகுசு காரில் கடத்திச்செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 6 பேரை கைது செய்தனர். இந்த 6 பேரில் 5 பேர் சிறுவர்கள்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 சிறுவர்களையும், 18 வயதுக்கும் மேற்பட்டவர்களாக கருதி, அவர்கள் செய்த குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனை வழங்கக்கோரி சிறார் நீதி வாரியத்தில் மனு தாக்கல் செய்ய காவல்துறையினர் பரிசீலித்து வருகின்றனர்.
இந்த ஐந்து சிறுவர்களின் ஒருவர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லை என்றும், ஆனால் வன்கொடுமை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோக்களில் இருக்கிறார் என்றும் போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன், போலீசார் சிறார் நீதி வாரியத்தில் கோரிக்கை வைப்பார்கள் என்று தெரிகிறது. போலீசாரின் இந்த முடிவுக்கு தெலங்கானா அமைச்சரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் செயல் தலைவருமான கே.டி. ராமாராவ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.