ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் முதலாவது ஜி20 வேலைவாய்ப்புப் பணிக்குழுக் கூட்டம் இன்று (பிப். 3) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உரையாற்றினார். அப்போது அவர், உலகளாவிய தொழிலாளர் சந்தை எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வுகளை ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் மட்டுமே வழங்க முடியும்.
கரோனா ஊரடங்கு காரணமாக உலகெங்கிலும் வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக பல நாடுகளில் வேலையின்மை அதிகரித்துவிட்டது. சிறு, குறு, நடுத்தர வணிகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் வேலையின்மை ஏற்பட்டுள்ளது.
வருமான சமத்துவமின்மை, வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தொடர்பான விவகாரங்களில் அரசாங்கங்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அந்த வகையில், பல நாடுகள் பொருளாதார ஊக்குவிப்பு மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவை வழங்குவதில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இருப்பினும், வேலைவாய்ப்பு வழங்குவதில் சவால்களை எதிர்கொள்கின்றன. நாட்டில் கரோனா காலகட்டத்தின் போது 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்களை விநியோகம் செய்யப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 50 கோடி பேருக்கு சுகாதார பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதேபோல 32 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு பிணையில்லாத கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே, அனைவருக்குமான வளர்ச்சியை உள்ளடக்கிய கண்ணியமான வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்த சர்வதேச சமுதாயத்தின் முனைப்பான நடவடிக்கைகளை ஆலோசிப்பதாக அமைய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவின் சிறந்த ஏற்றுமதி நாடாக அமெரிக்கா உள்ளது - பியூஷ் கோயல்