கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஒன்றிய அரசு கடுமையான நிதி நெருக்கடி நிலையில் உள்ளது. இந்நிலையில், சமையல் சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
அதேசமயம், சமையல் சிலிண்டர் மானியம் வருகிறதா? இல்லையா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழத் தொடங்கின. ஏனெனில் மானியம் தொடர்பாக பல பிரச்சினைகள் எழுந்தன.
ஆனால் உண்மையில் மானியம் உயர்த்தப்படவில்லை. ஆனால், விலையேற்றம் போன்ற காரணங்களால் கிட்டத்தட்ட மானியம் ரத்து செய்யப்பட்ட சூழலே இருக்கிறது. 2020-21 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் பொதுமக்களுக்கு மானியமாக மொத்தம் ரூ.16,461 கோடி, அரசு தரப்பில் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 2021-22 நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் ரூ.1,233 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுவே பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், மானிய விலையில் கிடைக்கும் சிலிண்டரின் விலையும், மானியமில்லா சிலிண்டரின் விலையும் கிட்டத்தட்ட ஒரே விலையாக இருப்பதால் மானிய உதவி வந்ததே தெரியவில்லை. சிலிண்டர் விலையைப் பொறுத்தவரையில், 2020 டிசம்பர் 1ஆம் தேதி முதல் 2021 மார்ச் 31ஆம் தேதி வரையில் சிலிண்டர் விலை 225 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. 2020 பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.858 ஆக இருந்தது. 2020 மே மாதத்தில் இதன் விலை ரூ.582 ஆகக் குறைந்தது. பின்னர் ஜூன் மாதத்தில் ரூ.594 ஆக உயர்த்தப்பட்டது.
கடந்த ஓராண்டில் மட்டும் சமையல் எரிவாயுவின் விலை ரூ. 25 என உயர்ந்து காணப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்காக எரிவாயுவின் விலை தொடர்ந்து உயர்வதால், தமிழ்நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை ரூ. 900ஐ தாண்டியது. ஒரே ஆண்டில் சமையல் எரிவாயுவின் விலை ரூ. 285 உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சிக்கும், அவதிக்கும் ஆளாகியுள்ளனர்.