புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்றது. மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களுக்கு முதல்கட்டத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு குறித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டம் காலை 10.30 மணி முதல் 11.30 மணி முதலமைச்சரும், கூட்டணித் தலைவருமான ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி
இது குறித்து பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறுகையில், “உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் அனைத்தும் இணைந்துப் போட்டியிடுவோம்.
எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது குறித்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவுசெய்யப்படும். இன்னும் ஓரிரு நாள்களில் தொகுதிப் பங்கீடு குறித்த முடிவுசெய்யப்படும்.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும்” என்றார்.
கூட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் பக்தவச்சலம், ஜெயபால், பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், உள் துறை அமைச்சர் நமச்சிவாயம், அதிமுக சார்பில் தமிழ்நாடு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, எம்.சி. சம்பத், முன்னாள் எம்.பி. செம்மலை, மாநிலச் செயலாளர்கள் அன்பழகன், ஓம்சக்திசேகர், மாவட்டச் செயலாளர் ஓமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினராக எல். முருகன் போட்டியின்றித் தேர்வு