சூரத்: நாட்டில் உள்ள ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் ரயில் நிலையம் உலகத் தரத்திற்கு உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. கார் பார்க்கிங், மிகப்பெரிய டிக்கெட் ஹால் என சர்வதேச விமான நிலையங்களில் இருக்கும் அனைத்து வசதிகளையும் சூரத் ரயில் நிலையத்தில் அமைக்க திட்டமிட்டப்பட்டது. வைர நகரம் என்றும், ஜவுளி நகரம் என்றும் அழைக்கப்படும் சூரத்திற்கு வருகை தரும் வணிகர்கள், பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டது.
878 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு, பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்திற்கான டெண்டர்கள் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், தற்போது கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளதாகவும், இதற்காக சூரத் வழியாக உத்னா செல்லும் ரயில்களை மாற்று வழியில் அனுப்ப ரயில்வே அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் மேற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி