கொச்சி: பிரபல நடிகை 2017ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் காரில் கடத்தப்பட்டார். காருக்குள் நடிகையிடம் சிலர் அத்துமீறி நடந்து துன்புறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நடிகை அளித்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் மலையாள நடிகர் திலீப்புக்குத் தொடர்பு இருப்பதாக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இயக்குநர் வெளியிட்ட 2 ஆடியோ
அப்போது, இந்த வழக்கை விசாரிக்கும் துணை காவல் கண்காணிப்பாளர் பைஜூ பால்லோஸ் மற்றும் பிற காவலர்களைக் கொலை செய்ய கூட்டுச்சதி திட்டம் தீட்டியதாக திலீப் உள்பட ஆறு பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு ஆதாரமாக, தீலிப் மற்றும் அவர் கூட்டாளிகள் இணைந்து சதித்திட்டம் பேசும் இரண்டு ஆடியோ பதிவுகளை இயக்குநர் பாலசந்திரன் காவல் துறையிடம் சமர்ப்பித்தார்.
நடிகர் திலீப், திலீப்பின் சகோதரர் அனூப், மைத்துனர் டிஎன் சுராஜ், உறவினர் அப்பு, நண்பர்கள் பைஜூ செங்கமநாடு, சரத் ஆகியோர் என மொத்தம் ஆறு பேர் மீது காவலர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக ஜனவரி 9ஆம் தேதி வழக்குத் தொடரப்பட்டது.
நிபந்தனைகள்
இந்த வழக்கில் இருதரப்பின் விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. மேலும், காவலர்களின் கைது நடவடிக்கையில் இருந்து தற்காத்துக்கொள்ள திலீப் உள்பட ஆறு பேர் முன்பிணைக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், அம்மனுவை விசாரித்த நீதிபதி கோபிநாத் தலைமையிலான அமர்வு திலீப் உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேருக்கு இன்று (பிப். 7) நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மூன்று நிபந்தனைகள், பின்வருமாறு:
- பிணை வழங்கப்பட்ட அனைவரும் தங்களின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கான நிகரான உத்தரவாதங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- அனைவரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணையிலோ அல்லது சாட்சிகளிடமா தலையிடக் கூடாது.
குறிப்பிடப்பட்டுள்ள இந்த நிபந்தனைகளை மீறினால், அவர்களைக் கைதுசெய்ய காவல் துறையினருக்கு முழு அதிகாரம் உள்ளது என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: லதா மங்கேஷ்கர் இறுதி யாத்திரை; துஆ செய்த ஷாரூக்கான்..!