கொல்கத்தா : காங்கிரஸின் மறைந்த மூத்தத் தலைவர் சோமன் மித்ராவின் மகன் ரோஹன் மித்ரா.
இவர் மேற்கு வங்க காங்கிரஸில் பொதுச் செயலாளராக இருந்துவந்தார். இந்தப் பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரிக்கு இன்று (ஜூலை 14) வழங்கினார்.
அந்தக் கடிதத்தில், “இடதுசாரிகள் கூட்டணி, ஆதரவு- எதிர்ப்பு என மிகவும் குழப்பமான முறையில் தேர்தலை சந்தித்தோம். கட்சி பணியில் ஈடுபடும் தொண்டர்களை உற்சாகப்படுத்த யாரும் இல்லை.
இதனால் நாம் தோல்வியுற்றோம். ஆனாலும் நாம் தோல்வியில் இருந்து பாடம் பயிலவில்லை. சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மே2ஆம் தேதிக்கு பிறகாவது நிலைமை மாறும் என நினைத்தேன். எதுவும் நடக்கவில்லை, மறுமலர்ச்சி நிகழவில்லை. ஆகவே, நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ரோஹன் தனது ராஜினாமா கடிதத்தில், “கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களை தலைமை பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் தட்டிக் கொடுப்பதில்லை” என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
முன்னதாக ரோஹனின் தாயார் தேர்தலுக்கு முன்பு, பாஜக மூத்தத் தலைவர் சுவேந்து அதிகாரியை சந்தித்தார். இதையடுத்து அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டது, ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
இதைக் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பாராட்டியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : 'இனியும் சும்மா இருக்க மாட்டேன்' - சசிகலாவின் நியூ ஆடியோ