டெல்லி: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு அக்கட்சியின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கோளாறே காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டினர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர் ஜெகதீஷ் சர்மா ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறியதாவது, "நாடு முழுவதும் மக்கள் அவதிப்படுகின்றனர். விவசாயிகள் சாலைகளில் உள்ளனர். நமது வீரர்கள் வீரமரணம் அடைகின்றனர். இப்படி இருக்க உத்தரப்பிரதேசத்தில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவதாகக் கூறுவதன் பின்னணியில் காரணம் உள்ளது" என்றார்.
பஞ்சாபில் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிக்கும் ஆம் ஆத்மி கட்சியின் உயர்வு குறித்து கேட்டதற்கு, "இது எல்லாம் மோடி ஜி-யின் திட்டமிட்ட விளையாட்டு. அவரே கடந்த முறை, கேப்டன் அமரீந்தர் சிங்கை வெற்றி பெறச்செய்தார். தற்போது பஞ்சாபில் ஆம் ஆத்மியின் ஆட்சியைக் கொண்டு வந்துள்ளார்" எனக் கூறினார்.
பஞ்சாபின் காங்கிரஸ் எம்.பி. ஜஸ்பிர் சிங் கில் தனது கட்சியை கடுமையாக தாக்கிப் பேசினார். குறிப்பாக, பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி, மாநில வேட்பாளர் தேர்வு குழுத் தலைவர் அஜய் மாக்கன் ஆகியோர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை சரியான முறையில் தேர்வு செய்யவில்லை என ஜஸ்பிர் சிங் கில் குற்றஞ்சாட்டினார்.
"காங்கிரஸ் கட்சிக்குள் சண்டை, ஒழுங்கீனம், காசுக்காக சீட்டு கொடுத்தல், கர்வம், ஆணவம் உள்ளிட்டவற்றால் பஞ்சாபில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இந்த தோல்விக்கு காங்கிரஸ் தலைமை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், "மூன்று மாதங்களுக்கு முன்பு பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டது. ஆனால் ஹரிஷ் சவுத்ரி, அஜய் மாக்கன் ஆகியோர் பணம் வாங்கிக் கொண்டு செயல்பட்டதால், எதிர்க் கட்சி வாக்கைப் பெற்றுக் கொண்டது" என பகிரங்கமாக விமர்சித்தார் .
இதையும் படிங்க: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு; பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து