டெல்லி: மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர். இந்தநிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி, காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (டிச.24) பேரணி நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர். பேரணியின் முடிவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெறப்பட்ட 2 கோடி கையொப்பங்கள் அடங்கிய குறிப்புகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்கவுள்ளனர்.
இன்று காலை விஜய் செளக்கிலிருந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள், குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
அப்போது தடை உத்தரவை மீறி பேரணியில் ஈடுபட்டதாகக்கூறி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி கூறுகையில், "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை தேச விரோதிகள் என விமர்சித்து, பாஜக தலைவர்கள் சிலர் பாவச் செயலைச் செய்துள்ளனர்.
நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். மக்களின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, குடியரசுத் தலைவரை சந்திக்கும் உரிமை உள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகளின் குரல்களுக்கு செவிக்கொடுக்க மத்திய பாஜக அரசு தயாராக இல்லை" என்றார்.
இதையும் படிங்க: 2 கோடி கையொப்பங்களை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கச் செல்லும் ராகுல்!