புவனேஷ்வர்: குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று (ஜூலை 18) காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்த நிலையில், ஒடிசாவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவின் வாக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டக்-பரபதி தொகுதியின் எம்எல்ஏவான முகமது மொக்கிம், எதிர்கட்சியின் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு தனது வாக்கினை அளித்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,"நான் ஒடிசாவை சேர்ந்தவன். திரௌபதி முர்மு 'ஒடிசாவின் புதல்வி' என்ற முறையில் அவருக்கு வாக்களித்தேன். எனது மனசாட்சிப்படி வாக்களித்துள்ளேன். எம்எல்ஏக்கள் மனசாட்சியை எதிர்த்து செயல்பட கூடாது.
முக்கியமானவர்கள் பலரும், குறிப்பாக வெளிநாட்டில் இருப்பவர்களும் கூட என்னை தொலைப்பேசியில் அழைத்து முர்மு 'ஒடிசா மண்ணை சார்ந்தவர்' என்ற முறையில் ஆதரிக்க வேண்டுகோள் விடுத்தனர். ஒடிசா மக்கள் எனது முடிவுக்கு ஆதரவளிப்பார்கள். முர்முவின் வெற்றி எனக்கு பெருமை சேர்க்கும். இது என் சொந்த முடிவுதான். யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை" என்று தெரிவித்தார்.
ஒடிசாவின் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் யஷ்வந்த் சின்காவிற்குதான் வாக்களிப்பார்கள் என அக்கட்சியின் சட்டப்பேரவை தலைவரான நரசிங்கா மிஸ்ரா தெரிவித்திருந்தார். தற்போது, அந்த முடிவை மாற்றி மொக்கிம் வாக்களித்துள்ளார். மொக்கிமிற்கு கட்சியின் மீது அதிருப்தி இருப்பதாலேயே இந்த முடிவை எடுத்துள்ளார் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு ஒடிசாவின் பழங்குடி சமூகத்தை சார்ந்தவர். எனவே, ஒடிசாவை ஆளும் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் அரசும் திரௌபதி முர்முவுக்கு தங்களின் முழு ஆதரவை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Presidential Polls: மோடி, ஸ்டாலின் வாக்களித்தனர் - சக்கர நாற்காலியில் வந்த மன்மோகன் சிங்