கர்நாடகா மாநிலத்தில் உள்ள மேகேதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா முனைப்புடன் உள்ளது. இதற்காக மத்திய அரசிடம் தொடர் அழுத்தத்தை அம்மாநில அரசியல் கட்சிகள் தொடர்ந்து அளித்துவருகின்றன.
கர்நாடகாவின் இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. அணை கட்டும் முடிவானது தமிழ்நாட்டின் காவிரி நதி நீர் உரிமையை பறிக்கும் செயல் என தமிழ்நாடு அரசு, அரசியல் கட்சிகள் சார்பில் மத்திய அரசிடம் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் மேகேதாது அணை கட்டியே தீர வேண்டும் எனக் கூறி அம்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதமே இந்த மாபெரும் பாதயாத்திரை போராட்டம் நடைபெறவிருந்த நிலையில், கோவிட் பரவல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது மூன்றாம் அலை பரவல் ஓய்ந்து மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் பிப்ரவரி 27ஆம் தேதி பாதயாத்திரைப் போராட்டம் நடைபெறும் என கர்நாடகா காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா, மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, டி கே சிவக்குமார் ஆகியோர் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மாட்டுத் தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை