டெல்லி : வன்முறைச் சம்பவங்களால் பாதித்த மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி செல்ல வேண்டும் என்றும் அங்கு மீண்டும் அமைதி திரும்ப அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியின் தலைவர்கள், மணிப்பூர் சென்று திரும்பிய எதிர்க்கட்சிகள் பிரதிநிதிகள் குழுவினர் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, மணிப்பூரில் நீடித்து வரும் கலவரச் சம்பவங்களில் குடியரசுத் தலைவர் தலையிட்டு மாநிலத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர்கள் கோரியதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் தற்போதைய நிலை குறித்து குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கூட்டணி விளக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இரண்டு மணிப்பூர் பெண்களை மாநிலங்களவைக்கு நியமிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் கலைத்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம், எதிர்க்கட்சித் தலைவர்கள் அறிக்கை அளித்தனர்.
குடியரசுத் தலைவருடனான சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, வன்முறைச் சம்பவங்களால் பாதித்த மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி செல்ல வேண்டும் என்றும் அங்கு மீண்டும் அமைதி திரும்ப அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், மணிப்பூர் கலவரம் குறித்தும், அங்கு பெண்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டு உள்ள பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான தெளிவான அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுவிடம் வழங்கி உள்ளதாக கார்கே தெரிவித்தார். மாநிலத்தில் செயல்பட்டு வரும் நிவாரண முகாம்களின் நிலை மற்றும் பிற பிரச்சினைகள் குறித்தும் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்ததாக மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
கலவரம் பாதித்த மணிப்பூர் மாநிலத்திற்கு கடந்த ஜூலை 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளின் குழு சென்றது. மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு சென்ற எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் குழு, கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும், நிவாரண முகாம்களில் வசித்து வரும் மக்களையும் சந்தித்து பேசினர்.
மேலும், மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், மாநிலத்தில் மீண்டும் அமைதியை நிலைநாட்டவும் ஆளுநர் அனுசுய உய்கேவிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க : PT Usha: மாநிலங்களவை தலைவரான பி.டி உஷா! ஒலிம்பிக் மங்கையின் சபாநாயகர் கனவு!