போபால் (மத்தியப் பிரதேசம்): இந்திய ராணுவத்தில் சமூகத்தை அடிப்படையாக கொண்டு (caste-based regiment) படைப்பிரிவு நிறுவப்படுவது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து மேற்கொள்ளப்படுவது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்யவும், போரில் வெற்றி பெறவும் சமூகத்தின் அடிப்படையில் ஆள்களை தேர்வு செய்து ராணுவத்தில் நியமனம் செய்தனர்.
அந்த வகையில், ஆஹிர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ராணுவத்தில் தங்களுக்கென ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பிரம்மாண்ட போராட்டம்
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மார்ச் 23ஆம் தேதி, குருகிராமில் உள்ள டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை எண்48இல் பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் எனப் பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பலத்த காவல்துறை பாதுகாப்பு அங்கு போடப்பட்டது.
போராட்டக்காரர்களுள் ஒருவரான மோர்ச்சா உறுப்பினர் மனோஜ் கன்க்ரோலா கூறுகையில், "ஆஹிர் தனிப் படைப்பிரிவு கோரிக்கை இப்போது வைக்கப்பட்டது அல்ல. சுதந்திரம் பெற்றதிலிருந்து, அஹிர் சமூகத்தினர் இந்தக் கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். நாங்கள் இதுவரை மௌனமாக போராட்டம் நடத்தி வந்தோம். அரசியல் கட்சி தலைவர்கள், அலுவலர்கள் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதனால் இப்போது அடுத்தக்கட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளோம்" என்றார். போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆஹிர் தனிப் படைப்பிரிவு கோரிக்கை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் ஆகியோரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஒன்றிய இணை அமைச்சரும் குருகிராம் எம்பியுமான ராவ் இந்தர்ஜித் சிங், ராஜ்யசபா எம்பி தீபேந்தர் ஹூடா மற்றும் முன்னாள் அமைச்சர் ராவ் நர்பீர் சிங் ஆகியோரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக, ஹூடா மாநிலங்களவையில் இந்தக் கோரிக்கையை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், ஆஹிர் தனிப் படைப்பிரிவு உருவாக்க வேண்டும் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவருமான அருண் யாதவ் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், "துணிச்சலான ஆஹிர் மக்களின் தியாகங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். ராணுவத்தில் ஆஹிர் தனிப் படைப்பிரிவு அமைக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தி காஷ்மீர் ஃபைல்ஸ்; கெஜ்ரிவால் கேள்விக்கு பதிலளிக்குமா பாஜக?