நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடைபெறவுள்ளது. பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்ற நிலையில், 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தாமதமாகி உள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன. 1931ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளிவிவரத்திற்கு பின் இந்தியாவில், சாதிவாரி புள்ளி விவரங்கள் எதுவும் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இச்சூழலில், இட ஒதுக்கீடு, சமூக நீதி கொள்கைகளை முறையாக நடைமுறைபடுத்த இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கோரிவருகிறது.
7 பேர் கொண்ட காங்கிரஸ் குழு
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்ய ஏழு பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தக் குழுவை கர்நாடக முன்னாள் முதலமைச்சர் வீரப்ப மொய்லி கூட்டுகிறார்.
மேற்கு வங்க எம்பி அபிஷேக் மனு சிங்வி, காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மோகன் பிரகாஷ், ஹரியானா எம்எல்ஏ குல்தீப் பிஷ்னோய், ஆர்பிஎன் சிங், பிஎல் புனியா ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக மக்களவையில், பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை கோரியதைத் தொடர்ந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகளின் (எஸ்இபிசி) பட்டியலைத் தயாரித்து பராமரிப்பதற்கான அதிகாரத்தை மீட்பதற்கான மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு நன்மை பயக்கும்- நிதிஷ் குமார்!