டெல்லி: மத்திய அரசு, கரோனா தடுப்பூசியை அதிகளவில் ஆர்டர் செய்யாததும், மாநிலங்களுக்கு போதிய அளவில் விநியோகிக்காததும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. நாடு முழுவதும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்தார். கரோனா பேரிடருக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என நீதிமன்றங்களும் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி வந்தன.
நேற்று(ஜுன்.7) தடுப்பூசி கொள்கையில் புதிய மாற்றத்தைப் பிரதமர் மோடி அறிவித்தார்.அதன்படி, 75 விழுக்காடு தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்யும். 18 வயதை கடந்த அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கு 25 விழுக்காடு தடுப்பூசி வழங்கப்படும். சேவைக் கட்டணம் ரூ.150 மட்டுமே வசூலிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தடுப்பூசிக்குத் தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்க அனுமதியளித்து ஏன்? எனக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது ட்வீட்டில், "எனக்கு ஒரு கேள்வி.. தடுப்பூசி இலவசம் என்றால் ஏன் தனியார் மட்டும் கட்டணம் வசூலிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.