டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி நான்கு விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்கு, ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.
அதன்பின்னர் நடந்த வன்முறைச் சம்பவங்களில், ஒரு செய்தியாளர் உள்பட மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு 9ஆக உயர்ந்தது. தற்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
விரிவான உண்மை விளக்கும் அறிக்கை
இதையடுத்து, காங்கிரஸ் கட்சி, லக்கிம்பூர் விவகாரத்தில் விரிவான உண்மை விளக்கும் அறிக்கையைத் தயாரித்திருந்தது. அந்த அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பதற்காக நேரம் ஒதுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ் தரப்பில் இருந்து ஏழு பேர் அடங்கிய குழு, சந்திப்புக்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், குடியரசுத் தலைவர் ஐந்து பேரை மட்டும் இன்று (அக். 13) சந்திக்க அனுமதி அளித்தார்.
ஐந்து பேர் அடங்கிய குழு
இந்நிலையில், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, ஏ.கே. ஆண்டனி, குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் அடங்கிய குழு குடியரசுத் தலைவரை இன்று சந்தித்து, விரிவான உண்மை விளக்கும் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
முன்னதாக, லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம், உச்ச நீதிமன்ற தலையீடு போன்றவற்றால் பூதாகரமான நிலையில், ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உத்தரப் பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லக்கிம்பூர் வன்முறை: 8 பேர் உயிரிழப்பும்...தொடரும் அநீதிகளும்