உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நேற்று (அக்.4) ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் காரில் சென்றபோது உழவர்கள் கறுப்புக் கொடி காட்ட முயற்சித்துள்ளனர்.
அப்போது உழவர்கள் மீது அமைச்சரின் மகன் காரை ஏற்றியதாகக் கூறப்படுகிறது. இதில் நான்கு உழவர்கள் உயிரிழந்ததாக சம்யுக்தா கிசான் மோச்சார் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த உழவர்கள் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் காரை தீயிட்டு கொளுத்தினர்.
இதையடுத்து, வன்முறை களமாக மாறிய லக்கிம்பூரில் கார் மோதி நான்கு உழவர்களும் தொடர்ந்து நடைபெற்ற வன்முறை மோதலில் நான்கு பேரும் என மொத்தம் எட்டு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், வன்முறை நடைபெற்ற பன்வீர்பூருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி இன்று நேரில் செல்வதாக இருந்தது. இதற்காக, அவர் லக்னோவில் இருந்து இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார்.
சரமாரி கேள்வி எழுப்பிய பிரியங்கா காந்தி
ஆனால், பிரியங்கா காந்தியை பன்வீர்பூர் கிராமத்திற்குள் நுழைய காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. அவரை கிராம எல்லையிலேயே தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இது குறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், "இந்த அரசு உழவர்களை மட்டுப்படுத்தும் செயலில் ஈடுபடுவதை இது காட்டுகிறது. இந்த நாடு உழவர்களின் நாடு, பாஜக சித்தாந்தத்தை திணிப்பதற்கான நாடு அல்ல. பாதிக்கப்பட்டவரின் உறவினர்களை சந்திக்க முடிவு செய்து நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. நீங்கள் ஏன் எங்களை தடுத்து நிறுத்துகிறீர்கள்? உங்களிடம் வாரண்ட் இருக்கிறதா...? எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க : வன்முறையின்போது எனது மகன் அந்த இடத்தில் இல்லை - அமைச்சர் விளக்கம்