டெல்லி: டெல்லியில் மதுபான ஊழல் விவகாரம் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு தலைவலியாக மாறி இருக்கும் நிலையில், அதைத் தொடர்ந்து கெஜ்ரிவாலின் அரசு குடியிருப்பு புதுப்பிப்பு விவகாரம் பூதாகரமாகி வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால், தனது அரசு குடியிருப்பு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது என்றும், அது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறி அரசு செலவில் அதனைப் புதுப்பித்தார். கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.
இதில், மார்பிள், தரைவிரிப்புகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட வீட்டின் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின. இதனை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. கெஜ்ரிவால் தனது வீட்டை புதுப்பிப்பதற்காக 45 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதற்கு ஆம்ஆத்மி தலைவர்கள், பிரதமரின் இல்லமும், மற்ற மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களின் இல்லமும் இதை விட பல மடங்கு நிதியைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லம் சுமார் 171 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் இன்று(மே.7) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் அரசு இல்லத்தைப் புதுப்பிக்க 45 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், உண்மையில் அதைவிட பல மடங்குத் தொகை செலவு செய்யப்பட்டுள்ளது. இல்லத்தை புதுப்பிக்க 171 கோடி ரூபாயை டெல்லி முதல்வர் செலவு செய்துள்ளார்.
மேலும், அரசு இல்லத்தை விரிவுபடுத்துவதற்காக சிவில் லைன்ஸ் பகுதியைச் சுற்றியுள்ள அரசு அதிகாரிகளின் குடியிருப்புகளும் காலி செய்யப்பட்டுள்ளன. இந்த அதிகாரிகளுக்கு, காமன்வெல்த் கிராமம் பகுதியில் வீடுகள் வழங்கப்படவுள்ளன. டெல்லி அரசு, இந்த பணத்தை நாட்டின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து எடுத்துச் செலவு செய்துள்ளது. ஆனால், மாநில அரசின் மானியக் கோரிக்கையில் அதனை குறிப்பிடவில்லை.
வீட்டைப் புதுப்பிக்கும்போது கட்டுமானத்தின் பரப்பளவை இரட்டிப்பாக்கியுள்ளனர். அதோடு அங்கிருந்த பாரம்பரிய வீட்டையும் இடித்துள்ளனர். சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அரசு வீடுகள் மிகவும் பழமையான பாரம்பரிய கட்டடங்களாகும். அதோடு, புதுப்பிப்புப் பணிகளின்போது அப்பகுதியிலிருந்து 28 மரங்களை வெட்டியுள்ளனர். இந்த புதுப்பிப்புப் பணிகளுக்குப் பின்னால், டெல்லி நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முறைகேடுகள் இருப்பதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கடிதம் எழுதவுள்ளேன். உடனடியாக அங்கு நடைபெறும் பணிகளை நிறுத்தவும், முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் ஆளுநரிடம் வலியுறுத்துவேன். ஆம்ஆத்மியினர் தங்களை சாதாரண மனிதர்கள் என்று கூறிக் கொண்டு, இப்போது பெரிய பங்களாக்களில் குடியிருக்கிறார்கள், ஊழல் செய்கிறார்கள்" என்று குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: Karnataka Election: பெங்களூரு நிறுவனர் கெம்பெ கவுடாவுக்கு பிரதமர் மோடி மரியாதை!