சிம்லா (இமாச்சலப்பிரதேசம்): கடந்த நவம்பர் 12ஆம் தேதி இமாச்சலப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான 76.44 சதவிகித வாக்குகளை எண்ணும் பணி, இன்று (டிச.8) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அம்மாநிலத்தில் உள்ள 68 தொகுதிகளில் 24 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
மேலும் 15 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனையடுத்து பாஜக 11 தொகுதிகளில் முன்னிலையிலும் 15 தொகுதிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல் சுயேச்சை வேட்பாளர்கள் 1 இடத்தில் முன்னிலையிலும் 2 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
இம்மாநிலத்தில் 67 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய ஆம் ஆத்மி, இதுவரை ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. குறிப்பாக இமாச்சலப்பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள சுந்தர் நகரின் ஒரு தொகுதியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அங்கு பாஜகவின் ராகேஷ் ஜம்வால், காங்கிரஸ் வேட்பாளரை 8,125 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் செராஜ், காங்கிரஸின் சேத் ராமை விட 31,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
அமைச்சர்கள் பிக்ரம் சிங் (ஜஸ்வந்த் பராக்பூர்) மற்றும் சபாநாயகரும் பாஜக தலைவருமான விபின் சிங் பர்மர் (சுல்லா), ராம் லால் மார்கண்டா (லாஹவுல் ஸ்பிதி), கோவிந்த் சிங் தாக்கூர் (மனாலி), சுரேஷ் பரத்வாஜ் (கசும்ப்டி), ராஜிந்தர் கர்க் (குமர்வின்), ராஜீவ் சைசல் (கசௌலி), ராகேஷ் பதானியா (பதேபூர்) மற்றும் சர்வீன் சவுத்ரி (ஷாஹ்பூர்) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
அதேபோல் பாஜகவின் முன்னாள் அமைச்சர் நரேந்தர் பிரகடாவின் மகன் சேத்தன் பிரகடா (ஜுப்பல் கோட்காய்) பின் தங்கியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சுக் ராமின் மகன் அனில் சர்மா (மண்டி சதர்) முன்னிலை வகிக்கிறார். சட்டமன்ற எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவர் முகேஷ் அக்னி ஹோத்ரி ஹரோலி தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் குல்தீப் ரத்தோர் (தியோக்), முன்னாள் அமைச்சர் சுதிர் சர்மா (தர்மசாலா), தானி ராம் ஷண்டில் (சோலன்) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். கின்னூரிலிருந்து காங்கிரஸின் ஜகத் சிங் நேகி, சிம்லா கிராமத்திலிருந்து மறைந்த முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் மற்றும் நௌடானில் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
டெஹ்ராவைச் சேர்ந்த ஹோஷியார் சிங்கும், நலகாரைச் சேர்ந்த கே.எல்.தாக்கூரும் சுயேச்சையாக முன்னணியில் உள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவரும், சிட்டிங் எம்எல்ஏவுமான ஆஷா குமாரி டல்ஹவுசியிலும், காங்கிரஸின் கவுல் சிங் தராங்கிலும் பின் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காங்கிரஸுக்கு சாதகமாக முடிவுகள் வரும். நாங்கள் நிச்சயமாக ஆட்சி அமைப்போம் என்று நம்புகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: Gujarat Election Result: கேபிள் பாலம் விபத்து நடந்த மோர்பி தொகுதியின் நிலவரம்!