ராஜஸ்தான்: அருணாச்சலப் பிரதேச எல்லையில் உள்ள தவாங் பகுதிக்குள் கடந்த 9ஆம் தேதி சீன வீரர்கள் நுழைய முயன்றபோது, இந்தியா- சீனா வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருநாட்டு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் இந்தியா- சீன எல்லைப் பிரச்னையில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பைலட் கூறும்போது, "தவாங் பகுதியில் சீனா ஊடுருவியது குறித்த அறிவிப்பை மத்திய அரசு சம்பவம் நடந்து ஐந்து நாட்களுக்குப் பிறகே வெளியிட்டது. அதிலும் புதிதாக தகவல் ஒன்றும் இல்லை.
சீன அத்துமீறல்களில் மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்போம். அதற்கு மத்திய அரசு இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். இந்திய - சீன எல்லைப் பிரச்னைகள் குறித்த பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகளை ஈடுபடுத்த வேண்டும், அரசியல் கட்சிகளை நம்ப வேண்டும்.
சீன எல்லையில் பதற்றம் நிலவுகிறது. எல்லையில் சீனா அத்துமீறும்போது அவர்களுக்குப் பதிலடி கொடுக்க இந்திய வீரர்களுக்கு உத்தரவிட வேண்டும். எல்லையில் என்ன நடக்கிறது? என்பதை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் ஒரு முடிவுக்கு வர முடியும். எல்லையில் நாட்டைக் காக்கும் வீரர்கள் குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம், இதுபோன்ற நெருக்கடியான சூழலில் அவர்களுக்கு ஆதரவாக நிற்போம்" என்றார்.