பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மூவர், மூத்தப் பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆர்எஸ்எஸ் மூத்தத் தலைவர்கள் என 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன்கள், இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றால் ஒட்டு கேட்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இவ்விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்ததாகக் குற்றஞ்சாட்டிய காங்கிரஸ், உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இது தேசத் துரோகம்
இது குறித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், மூத்தத் தலைவருமான ரண்தீப் சுர்ஜேவாலா, "நாட்டின் பாதுகாப்பு ஒட்டுமொத்தமாகப் பறிபோயுள்ளது. இது தேசத்துரோகமானது.
இந்தப் பெகாசஸ் உளவு சம்பவத்துக்கு, உள் துறை அமைச்சரேதான் பொறுப்பு. அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் முதல் கோரிக்கை. மேலும், இந்த விஷயத்தில் பிரதமரின் பங்கைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அதேபோல, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், "ஷா தனது பதவியை வகிக்க 'தகுதியற்றவர்' என்பதால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஒன்றிய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை' - அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்