இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாட்டின் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட நபர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் டிசம்பருக்குள் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தொற்று பாதிப்பும் குறைந்து வருவதால் பல மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. பெரும்பாலான மாநில அரசுகள் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மீண்டும் இயங்க அனுமதி அளித்தன.
இந்நிலையில், பஞ்சாப் மாநில அரசு தங்கள் அரசு ஊழியர்களுக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அம்மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் செப்டெம்பர் 15ஆம் தேதிக்குள் ஒரு டோஸ் தடுப்பூசியாவது கட்டாயம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஏதேனும் மருத்துவ பாதிப்பு கொண்டவர்கள் மட்டும் விலக்காக மற்ற அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும், இல்லை என்றால் செப்டெம்பர் 15க்குப் பின் தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை 51.2 விழுக்காடு மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியுள்ளனர். இந்திய அளவில் இதன் எண்ணிக்கை 58.2 விழுக்காடு ஆகும்.
இதையும் படிங்க: டான்களுக்கு சீட் இல்லை - முக்தார் அன்சாரிக்கு 'நோ' சொன்ன மாயாவதி