டெல்லி: சல்மான் குர்ஷித் கடந்த வாரம் தனது புதிய புத்தகத்தை வெளியிட்டார். அயோத்தி விவகாரம் குறித்து இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது தற்போது அவரை சர்ச்சையில் சிக்கவைத்துள்ளது.
சல்மான் குர்ஷித், அந்தப் புத்தகத்தில் இந்துத்துவத்தை ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார் என இரண்டு வழக்கறிஞர்கள் தனித் தனியாக டெல்லி காவல் துறையிடம் புகார்கள் அளித்துள்ளனர்.
காங்கிரசின் போலி முகம்
மேலும், அந்தப் புகார்களில், "இந்துக்களுடன் போலி சமத்துவத்தை உருவாக்கி, ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகளின் நெறிமுறைகளைச் சட்டப்பூர்வமாக்கத் துடிக்கும் காங்கிரசின் உண்மை முகத்தையே இந்தப் புத்தகம் வெளிப்படுத்துகிறது.
இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துக் கருத்துகளும் சல்மான் குர்ஷித்தின் சொந்த கருத்துகள். இந்தியாவுக்கு எதிராகப் போர் நடத்த சதி செய்தல், இந்து - இஸ்லாமியருக்கு இடையே பகைமையை வளர்க்கும் செயல்கள் போன்றவற்றையே இந்தக் கருத்துகள் நோக்கமாகக் கொண்டுள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சல்மான் குர்ஷித் எழுதிய அவதூறான வரிகள், இந்திய குற்றவியல் சட்டம் 153, 153A, 298, 505 ஆகிய பிரிவுகளின்படி குற்றம் என்றும், பிணையில் வெளிவர இயலாத அளவிற்கு இது தீவிரமான பிரச்சினைக்குரியது எனவும் வழக்கறிஞர்கள் புகார்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் உடன் ஒப்பிடுவது தவறு
இந்தச் சர்ச்சை குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், "இந்துத்துவம் என்ற அரசியல் சிந்தாந்தம் இந்து மதத்தின் கூட்டுக் கலாசாரத்திலிருந்து வேறுபட்டது என்றாலும் இந்துத்துவத்தை ஐஎஸ்ஐஎஸ் போன்ற ஜிகாதி அமைப்புகளுடன் ஒப்பிட்டுப் பேசுவது தவறானது மட்டுமில்லாமல் மிகைப்படுத்தப்பட்டது" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: Kangana Ranaut : பைத்தியக்காரத்தனம்... தேச துரோகம் - கங்கனாவைச் சாடிய வருண் காந்தி