முசாபர்பூர்: பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் நடிப்பில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதான் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் பதான் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது.
பதான் படத்தின் "பேஷாராம் ராங்" பாடலில் காவி நிற பிகினி அணிந்து தீபிகா படுகோனும், பச்சை நிற ஆடையில் ஷாருக்கானும் நடித்த காட்சிகள் வெளியான நிலையில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின.
மேலும் சமூக வலைதளங்களில் பாடலுக்கு தடை விதிக்கக் கோரி ஹெஷ்டேக்குகள் டிரண்டாகின. பாடலுக்கு எதிராக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியும், ஷாருக்கான் உள்ளிட்டோரின் கொடும்பாவிகளை தீயிட்டு எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் பதான் திரைப்படத்தை எதிர்த்து ஷாருக்கான் உள்ளிட்ட படக்குழுவைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பதான் படத்தில் இந்து மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பாடல் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், காவி நிறம் தரக்குறைவாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 23ஆம் தேதி மனு குறித்து நீதிமன்றம் விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: வேறு மத இளைஞருடன் பெண் பேருந்து பயணம்.. பாதி வழியில் நிறுத்திய இந்து அமைப்பினரால் பரபரப்பு!