திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான என்ஐஏ விசாரணையில், கேரள தகவல் தொழில் நுட்பத் துறையில் அலுவலராக பணிபுரிந்த ஸ்வப்னா, அவரது நண்பர் சந்தீப் நாயர், சரீத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இவ்வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அண்மையில், தங்கம் கடத்தலில் சபாநாயகர் ராமகிருஷ்ணன்தானுக்கும் தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்ததையடுத்து, அவரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், அமலாக்கத் துறையினர் தான் முதலமைச்சர் பினராயி உள்பட முக்கிய தலைவர்களின் பெயரைக் குறிப்பிடுமாறு கட்டாயப்படுத்தியதாக, வழக்கின் முக்கிய குற்றவாளி சந்தீப் நாயர் குற்றஞ்சாட்டியுள்ளார். அவரின் குற்றச்சாட்டு, இவ்வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்தீப் நாயர் மாவட்ட அமர்வு நீதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அமலாக்கத் துறை அலுவலர் ராதாகிருஷ்ணன் தான் முதலமைச்சர் பெயரையும், பிற அமைச்சர்களின் பெயரை இவ்வழக்கில் தொடர்புப் படுத்த வற்புறுத்தினர்.அவர்கள் சொல்வதைப் போல் கேட்டால், ஜாமீன் கிடைக்க உதவி செய்வதாகத் தெரிவித்தனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இவ்வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னாவிடமும் முதலமைச்சரின் பெயரைக் குறிப்பிடுமாறு முக்கிய அலுவலர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டது எனக் கேரள பெண் காவலர் ஒருவர், சிறப்பு ஆய்வுக் குழுவிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உரிய ஆவணம் இருந்தும் ரூ. 22 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்