இந்திய-சீன எல்லைப் பகுதியைக் குறிக்கும் எல்.ஏ.சி.யில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பதற்றநிலை நிலவிவருகிறது. லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் இருதரப்பு ராணுவம் மோதிக்கொண்டதில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
போர் சூழும் அபாயம் ஏற்பட்ட நிலையில், இரு நாடுகளும் தங்கள் ராணுவ உயர் அலுவலர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தன.
இந்தப் பேச்சுவார்த்தையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பாங்காங் ஏரி பகுதியில் இருதரப்பு ராணுவமும் பின்வாங்கும் நடவடிக்கையை நேற்று (பிப். 10) முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் உரையாற்றினார். அதில், "பாங்காங் ஏரியின் வடக்கு-தெற்கு கரையில் இருதரப்பு ராணுவம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, தங்களின் படைகளை பின்வாங்கத் தொடங்கியுள்ளன.
அதன்படி, சீனா தனது படையை பாங்காங் பகுதியின் வடக்கு கரையில் உள்ள 'விரல் 8' பகுதியில் வைக்கவும், இந்தியா 'விரல் 3' பகுதியில் வைக்கவும் முடிவெடுத்துள்ளன.
எல்லையான எல்.ஏ.சி.யில் அமைதி திரும்ப அனைத்துவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது. அதேவேளை எந்தவிதமான சூழலையும் சந்திக்கும் வகையில் இந்தியா உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி முதலில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - தயாநிதி