டெல்லி: வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட வர்த்தக எல்.பி.ஜி சிலிண்டரின் விலை தற்போது குறைந்துள்ளது. ஒரு சிலிண்டருக்கு தோராயமாக ரூ.39.50-ஆக விலை குறைந்துள்ள நிலையில், இன்று (டிச.22) புதிய விலை அமலுக்கு வந்துள்ளது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி அப்படியே விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் குறைவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் மாற்றியமைக்கும். அந்த வகையில், டெல்லியில் 19 கிலோ சிலிண்டர் ரூ.1,796.50-க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது விலையில் மாற்றம் ஏற்பட்டு ரூ.1,757-க்கு விற்பனையாகி வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் விலை அறிவிப்பில் தெரிவித்துள்ளன.
அதன்படி, டெல்லியில் ரூ.1,757 ஆகவும், மும்பையில் ரூ.1,710 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,868.50 ஆகவும், சென்னையில் 1,929 ஆகவும் தற்போது சிலிண்டர் விலை அமலுக்கு வந்துள்ளது. இந்த விலையானது உள்ளூர் வரிவிதிப்புகளின் அடிப்படையில் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
மேலும், அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கடைசியாக டிசம்பர் 1ஆம் தேதி வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலையை ரூ.21-ஆக உயர்த்தின. இதனால் கவலையில் இருந்த வணிகர்கள், தற்போது விலை குறைந்துள்ளதால் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தென் மாவட்ட மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது மு.க.ஸ்டாலின் டெல்லியில் என்ன செய்தார்? - நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி